அகத்தியர் ஞானப் பாடல்...பூரணமே தெய்வம் 🕉️ Agathiyar Song! #song
Published at : 23 Dec 2025
பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா
பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன் நினைவாய்க் கேளு
கலையான பதினாறும் பூரணமே ஆகும்
மாரணமா மூலகத்தில் மதி மயங்கி மதிகெட்டுப்
பூரணத்தை இகழ்ந்தார் ஐயா
வாரணத்தை மனம் வைத்துப் பூரணத்தைக் காத்தால்
வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே
2
ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும்
அயன்மாலும் அரனோடும் தேவர் எல்லாம்
மூச்சப்பா தெய்வம் என்றே அறியச் சொன்னார்
முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார்
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்
பேரான பூரணத்தை நினைவாக் காரு
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள்
வாசி நடுமைத்துள் வாழ்வார் தானே
3
தானென்ற பெரியோர்கள் உலகத்து உள்ளே
தாயான பூரணத்தை அறிந்த பின்பு
தேனென்ற பானமதைப் பானம் செய்து
தெவிட்டாத மௌன சிவயோகம் செய்தார்
ஊனென்ற உடலை நம்பி இருந்த பேர்க்கே
ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறென்றும்
நானென்றும் நீயென்றும் சாதி என்றும்
நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத் தானே
4
பிழைப்பதற்கு நால் பலவும் சொல்லா விட்டால்
பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும்
உழைப்பதற்கு நூல் கட்டிப் போடா விட்டால்
உலகத்தில் புத்தி கெட்டே அலைவார் என்றும்
தழைப்பதற்குச் சாதி என்றும் விந்து என்றும்
தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும்
உழைப்பதற்குச் சொன்னது அல்லால் கதி வேறில்லை
உத்தமனே அறிந்தோர்கள் பாடினார்கள்
5
பாடினார் இப்படியே சொல்லா விட்டால்
பரிபாடை அறியார்கள் உலக மூடர்
சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்துத்
தமைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்
வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும்
வையகத்தில் கல்செம்பைத் தெய்வம் என்றும்
நாடுவார் பூரணத்தை அறியார் மூடர்
நாய்போலே குரைத்தல்லோ ஒழிவார் தானே
6-10
தொகு
6
காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி
காரணத்தை அறிந்தோர்கள் கோடா கோடி
வீணாகப் புலம்பினதால் அறியப் போமோ
விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்கு ஆகும்
கோணாமல் சுழுமுனியில் மனத்தை வைத்துக்
குருபாதம் இருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாமல் ஒருநினைவாய்க் காக்கும் போது
நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டிக் கொள்ளே
7
ஊதியதோர் ஊரறிந்தால் அவனே சித்தன்
உத்தமனே பதினாறும் பதியே ஆகும்
வாதிகளே இருநான்கும் பதியின் பாதம்
வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு
சோதிபரி பூரணமும் இலை மூன்றும் தான்
தூங்காமல் தூங்கி அங்கே காக்கும் போது
ஆதியென்ற பராபரையும் அரனும் ஒன்றாய்
அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே
8
பாரப்பா உதயத்தில் எழுந்து இருந்து
பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி இரண்டு மாறிக்
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே
9
ஒன்றான பூரணமே இதுவே ஆச்சு
உதித்தகலை தானென்றும் இதுவே ஆச்சு
நன்றாகத் தெளிந்தவர்க்கு ஞானம் சித்தி
நாட்டாமல் சொன்னதனால் ஞானம் ஆமோ
பன்றான வாதிகுரு சொன்ன ஞானம்
பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும்
திண்டாடும் மனத்தோர்க்குக் காணப் போகா
தெளிந்தவர்க்குத் தெரிவித்த உகமை தானே
10
உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே
உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே
பகைமை பண்ணிக் கொள்ளாதே வீண் பேசாதே
பரப்பிலே திரியாதே மலை ஏறாதே
நகையாதே சினங்காதே உறங்கிடாதே
நழுகாதே சுழுமுனையில் பின் வாங்காதே
செகமுழுதும் பரிபூரணம் அறிந்து வென்று
தெளிந்துபின் உலகத்தோடு ஒத்து வாழே
11-16
தொகு
11
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு
வயிற்றுக்காய் வாய் ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
தமை அறியாச் சண்டாளர் முழு மாடப்பா
பாழாகப் பாவிகளின் சொல் கேளாதே
பதறாதே வயிற்றுக்காக மயங்கிடாதே
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக் கேட்டுக்
கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே
12
உடலுயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே
உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பர்
உடலுயிரும் பூரணமும் ஏது என்றக்கால்
உத்தமனே பதினாறும் ஒருநான்கு எட்டும்
உடலுயிரும் பூரணமும் அயன் மால் ஈசன்
உலகத்தோர் அறியாமல் மயங்கிப் போனார்
உடலுயிரும் பூரணடி முடியும் ஆச்சே
உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே
13
பதியின்ன இடம் என்ற குருவைச் சொல்லும்
பரப்பிலே விள்ளாதே தலை இரண்டாகும்
விதியின்ன இனம் என்று சொல்லக் கெளு
விண்ணான விண்ணுக்குள் அண்ணாக்கு அப்பா
மதி ரவியும் பூரணமும் கண்வாய் மூக்கும்
மகத்தான செவியோடு பரிசம் எட்டும்
பதியவிடம் சுழுமுனை என்றதற்குப் பேராம்
பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே
14
கைலாசம் வைகுந்தம் தெய்வலோகம்
காசி கன்யாகுமரி என்றும் சேது என்றும்
மயிலாடு மேகம் என்றும் நாகம் என்றும்
மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும்
துயிலான வாடை என்றும் சூட்சம் என்றும்
சொல்லற்ற இடம் என்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும்
தாயான வத்து என்றும் பதியின் பேரே
15
பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன்
பின்கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன்
பாருலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன்
பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்
சீருலகம் இன்னது என்று தெருட்டிச் சொன்னேன்
சித்தான சித்து எல்லாம் சுருக்கிச் சொன்னேன்
நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன்
நின்னுடம்பை இன்னது என்று பிரித்துச் சொன்னேன்
16
பிரித்து உரைத்தேன் சூத்திரம் ஈரெட்டுக் குள்ளே
பித்தர்களே நன்றாகத் தெரிந்து பார்க்கில்
விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன்
விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று
கருத்துடனே அறிந்து கொண்டு கலை மாறாதே
காரியத்தை நினைவாலே கருத்தில் கொள்ளு
சுருதிசொன்ன செய்தி எல்லாம் சுருக்கிச் சொன்னேன்
சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே.